சோலார் மூலம் மின்சாரம் வழங்க 11,000 பாதி கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன
- சோலார் மூலம் மின்சாரம் வழங்க 11,000 பாதி கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன…
- விரைவில் மேலும் 14,000 பேர் தேர்வு செய்யப்டுவர்…
- இத்திட்டத்தின் கீழ், தேசிய மின் கட்டமைப்பிற்கு 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி…
சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ், அரைவாசிப் பணிகள் நிறைவடைந்த 11,000 வீடுகள் மின்சார விநியோகத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த 11,000 வீடுகள் அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 15 திட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் 2015-2019 க்கு இடையில் செயல்படுத்தப்பட்டன.
குறைந்த வருமானம் பெறும் 25,000 வீடுகளுக்கு சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்டம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் கூட்டு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. பாதி கட்டி முடிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 25,000 வீடுகளை தேர்வு செய்து அந்தந்த வீடுகளை பூரணப்படுத்தி சோலார் பேனல்கள் அமைக்க முன்மொழியப்பட்டது. இதுவரை தெரிவு செய்யப்பட்டுள்ள 11,000 பாதி கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு மேலதிகமாக மேலும் 14,000 வீடுகளும் இந்த நாட்களில் தெரிவு செய்யப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் ஊடாக 25,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது மட்டுமின்றி, 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க சக்தியை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக சுமார் 650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி முதலீடு செய்யப்படும். இத்திட்டத்தின் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் உள்ளூரிலேயே கொள்வனவு செய்யப்படும். ஏனைய பணத்திற்கு மாத்திரமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 648 கிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார உற்பத்தியின் காரணமாக, இலங்கைக்கான எரிபொருள் எண்ணெய் இறக்குமதியின் வருடாந்த சேமிப்பு 116.64 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உதவியின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பல வீடமைப்புத் திட்டங்கள் நிதிப் பிரச்சினைகளால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் அவ்வாறான வீடுகளை நிறைவு செய்வதற்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. குறிப்பாக மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அனுராதபுரம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 11 மாவட்டங்களில் அரச காணிகளில் கிராமங்களாக ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடுகளில் பாதி கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பூரணப்படுத்தி சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் முதல் கட்டத்தில் வழங்கப்படவுள்ளது.