அமைச்சு பிரிவுகள்

நிருவாகப் பிரிவு

“வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் அரசாங்க கொள்கைகளை அமுல்படுத்தும் போதும், மக்களின் நலன்புரிக்காக மேற்கொள்ளப்படுகின்ற பல்வெறு பணிகளின் போதும், அமைச்சின் சகல பிரிவுகளுக்கும் உதவுவதும், அதற்குத் தேவையான வேலைச் சூழலை ஒழுங்கு செய்தல், மனித வளம் மற்றும் பௌதீக வளங்களை வினைத்திறனுடனும், விளைதிறன்மிக்கவாறும் முகாமைத்துவம் செய்வது நிருவாகப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.”

 

நிருவாகப் பிரிவின் பிரதான பணிகள்

 1. அமைச்சில் சேவையாற்றுகின்ற சகல அலுவலர்களினதும் தாபன நடவடிக்கைகளை பேணிவருதல்.
 2. அமைச்சின் சபல பராமரிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
 3. அமைச்சின் பெறுகை நடவடிக்கைகளை நிறைவேற்றல்.
 4. அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களில் அமைச்சின் தலையீட்டில் மேற்கொள்ளப்படும் சகல நிருவாக நடவடிக்கைகளும்.
 5. அமைச்சின் பதவியணியினர் தொடர்பிலான நடவடிக்கைகள்.
 6. அமைச்சின் சகல பிரிவுகளுக்கும் தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
 7. அமைச்சின் இணையத்தளத்தை இற்றைப்படுத்தல்.
 8. உற்பத்தித்திறன் செயற்பாடுகளை அமுல்படுத்தல்.
 9. அமைச்சின் நடவடிக்கைகளுக்கு போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
 10. அமைச்சின் அலுவலர்களுக்கான பயிற்சி அமர்வுகளை நடாத்தல்.

 

திட்டமிடல் பிரிவு

அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களில் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை திட்டமிடப்பட்டவாறு முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு வழிநடாத்துவதற்கு உதவுதல். வீடமைப்பு, நிர்மாணத்துறையில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றிய சரியான தகவல்களைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் உரிய தரப்பினர்கள் மற்றும் பொதுமக்களை அறிவுறுத்தல். வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறையின் அபிவிருத்தித் தேவைகளை இனங்கண்டு நிறுவனங்களினால் தயார் செய்யப்படுகின்ற கருத்திட்டப் பிரேரணைகளை நிதி அமைச்சினூடாக அங்கீகரித்துக்கொள்ள உதவுவதும் திட்டமிடல் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

திட்டமிடல் பிரிவின் பிரதான பணிகள்

 1. அமைச்சின் நோக்கு மற்றும் நோக்கங்களுக்கு ஏற்புடையதாக அமைச்சு மற்றும் அதன் கீழ் இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் செயல்ரீதியான திட்டத்தைத் தயார் செய்வது தொடர்பில் உரிய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள்.
 2. அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மாதாந்த  மற்றும் வருடாந்த செயற்றிட்டத்திற்கமைய மதிப்பீடு செய்தல்.
 3. வரவு செலவுத்திட்ட விவாதத்தின் குழு நிலைக்கு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கையைத் தயார் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.
 4. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பிலான தகவல்களைத் தயார் செய்வதும், அறிக்கையிடுவதும்.
 5. அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் கருத்திட்டப் பிரேரணைகளை தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் சமர்ப்பித்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல்.

வீடமைப்புப் பிரிவு

வீடமைப்புத் துறையின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் பொது வசதிகள் ஆகிய துறைகளின் கீழ் தேசிய கொள்கைகளை வகுத்தல், திட்டங்களைத் தயார் செய்தல், வழிநடாத்தல், பின்னாய்வு, மற்றும் அத்துறையில் ஈடுபட்டுள்ள அமைச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வழிகாட்டுவது இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

வீடமைப்புப் பிரிவின் பிரதான பணிகள்

 1. கொள்கைகளை வகுத்தல்.
 2. வீடமைப்புத் துறையின் முன்னேற்றத்திற்குத் தேவையான கொள்கைகளைத் தயார் செய்தல்.
 3. வீடமைப்புத்துறை தொடர்பிலான கொள்கைகளை ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து அமுல்படுத்தல்.
 4. குறைந்த வசதிகளைக் கொண்ட குடியிருப்புக்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் சமுதாயத்தை அபிவிருத்தி செய்தல்.
 5. மாவட்ட, பிரதேச மற்றும் கிராமிய வீடமைப்புக் குழுக்களைத் தாபித்தல்.
 6. உலகக் குடியிருப்புத் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் வீடுகளை நிர்மாணிப்பதுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல் மற்றும் உலகக் குடியிருப்புத் தினத்தைக் கொண்டாடுதல்.
 7. காணிகள் பற்றிய கடமைகள்
 8. வீடமைப்பு அபிவிருத்தி நோக்கங்களுக்கான காணிகளை சுவீகரித்தல் / காணி கொள்ளல் தொடர்பிலான நடவடிக்கைகள்.
 9. வீடமைப்பு நோக்கங்களுக்காக காணிகளை நீக்கம் செய்வது சம்பந்தமான நடவடிக்கைகள்.
 10. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 8(1) பிரிவின் கீழ் காணிகள் / வீடுகளின் சட்டரீதியான உரித்தை மக்களுக்கு நீக்கம் செய்தல்.
 11. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான காணிகளில் சட்டவிரோதமாக வீடுகளை நிர்மாணித்து வசித்து வருகின்ற குடியிருப்பாளர்களை அமைச்சரவையின் அங்கீகாரத்தின் போில் ஒழுங்குறுத்தல்.
 12. வீடமைப்பு அபிவிருத்தி
 13. நாட்டின் தேவைக்குப் பொருத்தமானவாறு வீடமைப்பு நிர்மாண நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் வீடமைப்புக் கருத்திட்டங்களை அமுல்படுத்தல்.
 14. தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களை மறுசீரமைத்தல்.
 15. வீடமைப்புக் கடன் உதவி நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்.
 16. வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பிலான அமைச்சரவை விஞ்ஞாபனங்களை சமர்ப்பித்தல்.
 17. வேறு அரச நிறுவனங்களுடன் இணைந்து வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்.
 18. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களடன் வீடமைப்புக் கருத்திட்டங்களை ஒருங்கிணைப்புச் செய்தல்.
 19. குறைந்த வசதிகளைக் கொண்ட குடியிருப்புக்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் சமுதாயத்தை கட்டியெழுப்புதல்.

தொழில்நுட்பப் பிரிவு

அமைச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை, கட்டிடத் திணைக்களம், அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டல்கள் இப்பிரிவினால் வழங்கப்படுகின்றன. அதற்கமைய, சகல நிறுவனங்கள் தொடர்பிலும் தனித்தனியாக நடாத்தப்படுகின்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்கள் அமைச்சில் நடாத்தப்படுகின்றன.

பிரதானமாக இந்த அமைச்சு நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்திக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு, தரமான மற்றும் சுற்றாடலுக்கு சாதகமான நிர்மாணக் கைத்தொழிலை உருவாக்குவதற்குள்ள நிறுவனங்களை வழிநடாத்த செயற்படுகின்றது. இதற்கு பிரதானமாக தலையீடு செய்வது தொழில்நுட்பப் பிரிவாகும்.

தொழில்நுட்பப் பிரிவின் பிரதான பணிகளாவன

 1. நிர்மாணத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகளை வகுத்தல்.
 2. நிர்மாணத் துறை சம்பந்தமான சட்டவரைவுகள், சட்டங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 3. தொழில்நுட்பத் துறையுடன் சம்பந்தப்பட்ட நிர்மாணக் கைத்தொழிலை ஒழுங்குறுத்தல் மற்றும் பொறியியல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை நிர்மாணக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்கு வழிநடாத்தல்.
 4. நிர்மாணத் துறைக்குத் தேவையான ஊழியப்படையணியை ஆயத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளல்.
 5. தொழில்வல்லுனர்கள் மற்றும் நிர்மாணக் கலைஞர்களை நிபுணத்துவம் மற்றும் அறிவுமிக்கவர்களாக்குவதற்கு மற்றும் தரமான நிர்மாணிப்பை மேற்கொள்வதற்கு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களை வழிப்படுத்தல்.
 6. தேவையான சந்தர்ப்பங்களில் அமைச்சரவை விஞ்ஞாபனங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளல்.

அவ்வாறே அதன் மற்றொரு உப பிரிவாக பொறியியல் சேவைகள் பிரிவு இயங்கிவருகின்றது.

நிர்மாணிப்புக் கருத்திட்டங்களுக்கு நியாயமான மற்றும் தாங்கிக்கொள்ளக்கூடிய விலைகளை நிர்ணயிப்பதன் மூலம் ஒட்டுமொத்த நிர்மாணிப்புக் கைத்தொழிலின் மொத்த நிர்மாணிப்புச் செலவினத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களின் நிர்மாணக் கருத்திட்டங்களுக்கு வெளிப்படைத்தன்மைமிக்க நியாயமான விலைகளுக்கமைய ஒப்பந்ததாரர்களைத் தேர்ந்தெடுக்க உதவுவதும் இந்த அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றது.

பொறியியல் சேவைகள் பிரிவின் பிரதான பணிகள்

 1. அரசாங்க நிறுவனங்களின் நிர்மாணிப்பு சம்பந்தமான நிலையான தொழில்நுட்பக் குழுவின் அங்கீகாரங்களைப் பெற்றுக் கொடுத்தல்.
 2. ஒப்பந்த வித்தியாசங்களுக்கு அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தல்.
 3. அமைச்சரவை நியமனம் செய்துள்ள பெறுகைக் குழு தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 4. அமைச்சின் பெறுகை குழுவின் தீர்மானங்களைப் பெற்றுக்கொடுத்தல்.
 5. நிர்மாணிப்புத்துறை சம்பந்தமான விலைகள் பற்றிய தரவு முறைமையை பேணிவருதல்.
 6. தேவையான சந்தர்ப்பங்களில் அமைச்சரவை விஞ்ஞாபனங்களைச் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளல்.

 நிர்மாணப் பிரிவு

பிரதானமாக அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம், தேசிய இயந்திரசாதன நிறுவகம், வரை. கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற நிர்மாணப் பணிகளை அமைச்சு மட்டத்தில் ஒருங்கிணைப்புச் செய்வது, மேலதிக செயலாளர் நிர்மாணப் பிரிவு இந்த அமைச்சில் தாபிக்கப்பட்டதை அடுத்து பொறுப்பளிக்கப்பட்ட பிரதான செயற்பணியாகும்.

பணிகள்

 • குறித்த நிறுவனங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல்.
 • குறித்த நிறுவனங்களுக்குரிய நிலுவைத் தொகைகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • நிர்மாணத் துறையில் கண்காணிப்புச் செய்தல்.
 • மதியுரைச் சேவைகளை ஆற்றுதல்.
 • பெறுகை மற்றும் ஒப்பந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்தல்.
 • அமைச்சரவை விஞ்ஞாபனங்களைத் தயார் செய்தல்.
 • உள்நாட்டு நிபுணத்துவம்மிக்க ஆட்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வெளிநாட்டு நிர்மாணத் துறையைச் சேர்ந்த விசேட நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள ஆட்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதற்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு சிபாரிசுகளைச் சமர்ப்பித்தல்.

தேசிய வீடமைப்பு ஆணையாளர் பிரிவு

இந்தப் பிரிவு 1973 இன் 01 ஆம் இலக்க வீடமைப்பு ஆதன உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பணிகளை நிறைவேற்றுகின்றது. அவ்வாறே, 1972 இன் 7 ஆம் இலக்க வாடகைச் சட்டத்தின் கீழ் பொறுப்பளிக்கப்பட்டுள்ள பணிகளையும் நிறைவேற்றி வருகின்றது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் மூலம் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள பிரதான நோக்கங்களான வாடகை குடியிருப்பாளர்களுக்கு உறுதிகளைப் பெற்றுக் கொடுத்தல், அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு நட்டஈடு செலுத்தல் போன்ற இலக்குகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு இப்பிரிவு செயற்பட்டு வருகின்றது.

நிதிப் பிரிவு

அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய நிறுவனங்களுக்கு ஏற்புடையதாகின்ற நோக்கங்களை அடைந்துகொள்ளத் தேவையான நிதி வளம் மற்றும் ஆலோசனையைப் பெற்றுக்கொடுத்தல், மேற்படி வளங்களைப் பயன்மிக்கவாறும், வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் பற்றி ஆலோசனை வழங்குதல் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

நிதிப் பிரிவின் பிரதான பணிகள்

 1. நிதி தொடர்பில் திட்டமிடல்.
 2. வரவு செலவுத்திட்டமிடல்.
 3. நிதியை உரிய அளவில், உரிய நேரத்திற்குப் பெற்றுக் கொள்ளல்.
 4. அமைச்சின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு நிதியை வழங்குவதும், செலவிடுவதும்.
 5. குறித்த தரப்பினர்களுக்கு செலவினம் மற்றும் நிதிசார் முன்னேற்றம் தொடர்பில் உரிய திகதிகளில் அல்லது அதற்கு முன்னர் அறிக்கையிடல்.

 உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு

நிறுவனத்தின் உத்தேச நோக்கங்களை யதார்த்தமாக்கிக் கொள்வதற்காக நல்ல நிதி நிருவாகம் மற்றும் முறையான முகாமைத்துவத்தைத் தாபிப்பது இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் நிதி நிருவாகம் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளில் பங்கேற்று அந்நடவடிக்கைகளை மென்மேலும் முறையாகவும், வினைத்திறன்மிக்கதாகவும் மேற்கொள்வதற்கு முகாமைத்துவத்துக்கு வழிகாட்டல் மற்றும் தேவையான அறிவுரைகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் உதவுவதும் இப்பிரிவின் பிரதான பணிகளாகும்.

மீள்குடியேற்றப் பிரிவு

மீள்குடியேற்றப் பிரிவினால் யுத்தம் அல்லது வேறு காரணங்களினால் இடம்பெயர்ந்துள்ள இலங்கையர்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.